Tuesday, April 14, 2009

மெய்பக்தி

தாய் சேய் செய்யும் பிழையினை கணபொழுதில் மறந்து மன்னிக்கும் குணமுடையராக யிருத்தலியல்பு. தாயுமானாவரோ சகலரர்க்கும் மூலமாதலால் தன் பக்தர்கள் அறிந்தோ, அறியாமலோ, ஆணவமருளினாலோ செய்யுந் தவறினைப் பொருத்து, மன்னித்தருளுவதில் நிகரில்லாதவர். அதனாலன்றோ தாயினுஞ் சாலபரிந்தென்று இறைஞ்சுகிறார் மாணிக்கவாசகர்.

சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. அசுரர்களும், தேவர்களும் பகைவராயினுங் சிவவழிபாடுகளினாலே வான்முட்ட புகழ்பெற்றனர். இதை வலியுறுத்துவனவாகக் கூறப்படும் பக்திநெறிக் கதைகளுளொன்று வேடுவர் கண்ணப்பனின் கதை.

வேட்டையாடிய விலங்கின் புலாலையே உணவாக யுட்கொள்ளுமவன், பசியாறுவதற்கு முன் உணவினொரு பங்கினை தான் வேட்டையாடும் கானகத்தின் குடிகொண்டிருக்கும் ஆதிசிவலிங்கத்திற்கு படைக்குங் பழக்கமுடையவனாக யிருந்தான். வேட்டையாடிய பன்றியின் புலாலை முதலில் தான் சுவைத்துப் பார்த்த பின், சுவைமிகு துண்டுகளை மட்டும் படையலாக சிவலிங்க ஆவுடையிற் மீது பரப்பிய பிறகு, எஞ்சியத் துண்டுகளைக் கொண்டு தன் பசியாற்றுவான். இதையையே வழக்கமாகவும் கொண்டான்.

மறுபுறமோ பசுங் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்குங் மணங்கமழ வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னை யர்பணித்தக் கொண்டவராக திகழ்ந்தார் பூசர்.

சாத்திரங் கற்ற பூசரும், வேடுவரும் அடிப்படையிற் இருவேறு துருவங்களையாயினுங் தத்தம் பக்தியில் மெய்யன்புக் கொண்டவர்கள். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட பூசர் கடுஞ்சினங் கொண்டார். நித்தமும் நித்திரையின்றி மனவேதனைப் பட்டார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். பூசரின் மனகவலைப் போக்க இறையனார் கனவிற் தோன்றி, இன்றிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். அங்ஙனமே அவரும் ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது.

கண்ணப்பன் அன்றிரவு கண்ணப்பனும் நேரத்துடன் வேட்டை விலங்கினைத் தோளிற் தூக்கியபடி சிவனாரருகே வந்தான். நீவிர் புசிப்பதற்கு இதோ இளமானின் புலாலென வழக்கம் போல் படையலிட்டான் கண்ணப்பன். அக்கணம் சிவனாரின் இடக்கண்ணிற் குருதி வழியத் தொடங்கியது. குருதியினை கரத்தினால் துடைத்தும் கசிவது நிற்கவில்லை. சிவன் கண்ணில் புண், கண்டுங் காணாமற் யிருக்கலாகுமோ யெனக் கூறி, அம்பின் கூர்முனையாற் தன்னிடக் கண்ணைக் குற்றிப் பெயர்த்தெடுத்து புண்கண்ணில் பொருத்தினான். உனக்கின்றி எனக்கேன் யிருக்கண் யென்று மொழிந்தான். மறைந்திருந்த பூசரோ கண்டது கனவோ நனவோயென யறியாமற் திகைத்து நின்றார்.

இடக்கண்ணி்ற் நிற்கவே வலக்கண்ணி்ற் வழியாரம்பித்தது குருதி. ஐயகோ யென்செய்வேன் வலக்கண்ணையுங் பெயர்த்தெடுத்தால் வலப்புண் கண்ணை யெங்ஙன மறிவேன் யெனக் கூறினான் கண்ணப்பன். சற்றுஞ் சிந்தியாது வலக்காலை புண்கண்ணிற் மிதியவே, அம்பினாற் வலக்கண்ணேப் பெயர்க்க துணியவே, சிவனார் கண்ணப்பநாயனாரைத் தடுத்தருளினார். கண்ணப்பர் சிவனாருளால் யிருக்கண்ணையும் திரும்பப் பெற, பூசர் சிவவாக்கின்படி நடந்தவற்றை ஊராரிடங் கூற, கண்ணப்பரின் புகழ் உலகமெங்கும் பரவியது.

இனிதே முடிவுற்ற திருவிளையாடற் காட்சிச் சொல்ல விளைவது யாதெனில், எச்சிலிட்ட புலால் படைத்தல், செருப்பணிக் காலால் மீதித்தல் முதலியன தீச்செயலையாயினுங் திருக்கண்ணிற் குருதி தென்பட்டமாத்திரமே, தன்னிரு கண்ணையும் பெயர்த்தெடுத்து உறுப்புதானம் செய்திட்ட, இருப்பதனை யிழக்க முனைந்திட்ட துணிவே மெய்பக்தி யெனக் கொள்க.

No comments: